குறள்: 549 55. செங்கோன்மை
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்
மு. வரதராசனார் உரை
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
சாலமன் பாப்பையா உரை
அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.
மு. கருணாநிதி உரை
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்