பால்கள்
திருக்குறளின் மூன்று பெரும் பிரிவுகள்
1. அறத்துப்பால்
அறத்துப்பாலில் கடவுள் உண்மை கூறப்பட்டுச் சமயச் சார்பற்ற அறம் போதிக்கப்படுகிறது; அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று சாற்றப்படுகிறது; அன்புநெறி எல்லா இடங்களிலும் வலியுறுத்தப்படுகிறது; செயல்நிலை அறமே பெரிதும் வற்புறுத்தப்படுகிறது; பரந்துபட்ட பொறுமையுணர்வு அறிவுறுத்தப்படுகிறது.
2. பொருட்பால்
பொருட்பால் அரசும் சமுதாயமும் மனிதநிறைவுக்கு வழிகோலும் முறையைச் சொல்கிறது. மக்கள் யாவரும் சமம்; மனிதரிடையே ஏற்றத்தாழ்வு யாதுமில்லை; யாரும் எப்பணியையும் மேற்கொண்டு வாழ்வு நடத்தலாம்; எதுவும் ஒடுக்கப்படவில்லை; எல்லா வினைகளும் அறத்தின்பாற்பட்டனவாக இருத்தல்வேண்டும். இது பொருட்பால் கூறும் கருத்தின் சாரம்.
3. காமத்துப்பால்
குறளின் காமத்துப்பால் சங்க அக இலக்கியங்களின் கருத்துப் பிழிவாய் அமைந்து கற்பனைவளமும் இலக்கியச்சுவையும் சேர்ந்து காதலரின் கூடல், பிரிதல், ஊடல் என்ற பிரிவுகளில் காதல் நாடகமாய் அமைகிறது. காதலரின் பண்பட்ட நெஞ்சத்தை விளக்கும் கற்பனை கலந்த உணார்ச்சிக் குவியலாகத் தீட்டப்பட்டு அன்பும் அறனும் ஒன்றிய இன்பநெறியாய் ஒளிர்கிறது இது.