குறள்: 852 86. இகல்
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னாசெய் யாமை தலை
மு. வரதராசனார் உரை
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.
மு. கருணாநிதி உரை
வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்