1. கடவுள் வாழ்த்து

கடவுள் ஒருவர் உள்ளார்; அவரை நினைந்து வாழ்த்தி வணங்க வேண்டும் என்ற கருத்துப்பட அமைந்தது 'கடவுள் வாழ்த்து' என்னும் முதல் அதிகாரம். ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்ற அடைகளால் இறைவன் பாடப்படுகின்றான். கடவுளை நினைப்பவர் நன்கு வாழ்வர்; அவர்கள் துன்பங்களை உணரமாட்டார்கள்; அவர்களிடம் நல்வினை தீவினை தாக்கம் இல்லை; அவர்கள் நெடிது வாழ்வர்; அவர்களது தீராக் கவலைகளுக்கு மாற்றல் கிடைக்கும்; குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீட்சி பெறுவர்; வாழ்க்கை என்னும் கடலைக் கடந்து கரை சேர்வர் போன்ற பயன்களும் கூறப்படுகின்றன.