குறள்: 1190 119. பசப்புறு பருவரல்

காமத்துப்பால்கற்பியல்

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்நல்காமை தூற்றார் எனின்

மு. வரதராசனார் உரை

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.

சாலமன் பாப்பையா உரை

என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.

மு. கருணாநிதி உரை

என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!

பசப்புறு பருவரல் அதிகாரம் முழுவதும்