குறள்: 1324 133. ஊடலுவகை
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படை
மு. வரதராசனார் உரை
காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
சாலமன் பாப்பையா உரை
என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.
மு. கருணாநிதி உரை
இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது