133. ஊடலுவகை

ஊடல் உவகை என்பது ஊடல் கொள்வதில் மகிழ்ச்சி அடைதலைக் குறிக்கும். இருவர் பூசலிடும்போது மகிழ்ச்சி எப்படி உண்டாகும்? ஊடலுக்குப் பின் கூடினால் இன்பம் மிகும் என்பதை அவர்கள் அறிந்தவர்களாதலால் ஊடலில் ஈடுபட்டு இன்பம் காண்கின்றனர். பொதுமையான ஒரு ஊடற்காட்சியில் காமம் மிகக்கூடிய தலைவன் காதலியைத் தழுவ நெருங்கும்போது அவள் அகன்று நிற்பாள். அப்பொழுது அவன் படும் ஏக்கத் துயரத்தைக் கண்டு அவள் மகிழ்வாள். பின் அவள் பொய்க்காரணம் கற்பித்து அவன்மேல் சினம் கொண்டவள்போல் நடிப்பாள். அப்பொழுது உள்ளுக்குள் நகைத்து உவகை கொள்வாள் தலைவி கொள்ளும் ஊடலைத் தீர்க்கத் தலைவன் பணிந்து இன்மொழி கூறுவான். அது தலைவிக்கு வேடிக்கையாகத் தோன்றும். ஆனால் அதை வெளிகாட்டாமல் ஊடிக்கொண்டிருப்பாள். அதுபோலவே தலைவனும் சில சமயங்களில் ஊடலைத் தொடங்கி வைப்பான். இந்த விளையாட்டு இரவு முழுவதும் நீடிக்க வேண்டும் என இருவரும் விரும்புவர்.