குறள்: 905 91. பெண்வழிச் சேறல்
இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்
மு. வரதராசனார் உரை
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
சாலமன் பாப்பையா உரை
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
மு. கருணாநிதி உரை
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்