குறள்: 111 12. நடுவு நிலைமை
மு. வரதராசனார் உரை
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
எப்பகுதியினரிடத்தும் ஒப்ப நடத்தல் நடுவுநிலையாகும். எல்லாத் துறையிலும் எல்லார்க்கும் வேண்டப்படும் பண்பு இது. கருத்து வேறுபாடுகளில் செல்வம் ஈட்டுவதில், அறம் கூறுதலில், என அனைத்து நிலைகளிலும் அன்றாட செயல்பாடுகளில் நடுவுநிலையைப் போற்றி நடத்தல் வேண்டும். வலியவன், எளியவன், வறியன். செல்வன், தாழ்ந்த நிலையிலுள்ளவன், உயர்ந்த நிலையிலுள்ளவன் நண்பன், பகைவன் என்றெல்லாம் பாகுபாடு கருதாது அனைவரிடத்தும் நடுநிலை பிறழாமல் ஒழுகுதல் வேண்டும். செய்ந்நன்றி அன்பு காரணமாகவும் நடுவு நிலை தவறக்கூடாது. தனிமனிதப் பண்பான நடுநிற்றல் சமுதாய வளன் என்ற பரப்பில் விரிவாக்கம் பெற்று அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பது வள்ளுவரின் எண்ணம்.
குறள்: 111 12. நடுவு நிலைமை
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
குறள்: 112 12. நடுவு நிலைமை
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
குறள்: 113 12. நடுவு நிலைமை
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
குறள்: 114 12. நடுவு நிலைமை
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
குறள்: 115 12. நடுவு நிலைமை
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
குறள்: 116 12. நடுவு நிலைமை
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
குறள்: 117 12. நடுவு நிலைமை
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
குறள்: 118 12. நடுவு நிலைமை
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
குறள்: 119 12. நடுவு நிலைமை
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
குறள்: 120 12. நடுவு நிலைமை
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.