குறள்: 1022 103. குடிசெயல் வகை
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்நீள்வினையான் நீளும் குடி
மு. வரதராசனார் உரை
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
சாலமன் பாப்பையா உரை
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
மு. கருணாநிதி உரை
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்