103. குடிசெயல் வகை

தெரிந்து செயல்வகை, வினை செயல்வகை, பொருள் செயல்வகை ஆகிய செயல்வகைகள் முன்பு கூறப்பட்டன, இங்கு குடிசெயல்வகை சொல்லப்படுகிறது. தான் பிறந்த குடியை அதாவது குடும்பத்தை உயரச் செய்தலின் திறம் குடிசெயல்வகை எனப்படும். குடி-இல்-குடும்பம்-என்னும் சொற்கள் தான் பிறந்த குடியையே உணர்த்தும். தன் குடியைத் தாழாமற் செய்வதும், அதை மேன்மேலும் உயர்த்தலுமே குடிசெயல்வகையாகும். குடும்பத்தை ஆளுதலை உடைமையாக்கிக் கொள்ளுதலும், தம் குடியைச் சுமக்கும் வன்மையும், அறிவும், முயற்சியும் முதலாயின செயல்வகைகளாகக் கூறப்படுகின்றன. குடியை உயர்த்த முயல்பவனைக் குடிசெய்து வாழ்வான் என்றும் குடி செய்வார்‌ என்றும் வள்ளுவர் அழைக்கிறார், குடிசெய்வல் அதாவது குடியை மேன்மையும் பெருமையும் சீரும் செல்வமும் உடையதாகச் செய்வேன் எனச் சூளுரைத்து செயல் முடியும் வரை கைதூவேன் (கையொழியேன்) என முயற்சியில் ஈடுபடுவான் குடிசெய்வான். அவனது செயற்பாடுகளால் குடி சிறப்படைகிறது-புகழ் பெறுகிறது-செல்வம் அடைகிறது. பிறந்த குடி, சுற்றம் என்று சொல்லும் போது அது ஒரு சிறு எல்லைக் கோட்டுக்குள் அடங்கி விடும். வீட்டை ஆளும் ஒருவனுக்கு உரைக்கப்பட்ட கருத்துக்கள் சமூகம், நாடு உயர்த்துவதற்கும் பொருந்துவதாகவே உள்ளன.