104. உழவு

நிலத்தில் உழுது பாடுபடும் தொழிலைப் போற்றுவது உழவு அதிகாரம். குறளில் ஒரு தொழிலுக்காக ஓர் அதிகாரம் படைக்கப்பட்டது உழவு ஒன்றுக்குத்தான். உழவு இல்லையேல் உணவு இல்லை. மாந்தர்க்குப் பசி இருக்குமட்டும் உழவு இருக்கும். உலகுக்கு உணவு வழங்கும் பயிர்த்தொழிலின் சிறப்பு பற்றி இங்கு பேசுகிறார் வள்ளுவர். உழுவோரின் பெருமை, உழவுத்தொழிலின் நுட்பங்கள், அது செய்யாது உண்டாகும் குறைகள் ஆகியன வகுத்துக் கூறப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் உலகோர் உழவை முன்னிறுத்தியே வாழ்கின்றனர் எனும் கருத்து அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. எந்த ஒரு தொழில் இல்லாது போனாலும் உழவுத் தொழில் செய்து வளம் கொழிக்க வாழலாம் என்பதை நிலத்தின் சிரிப்போடு வள்ளுவர் இவ்வதிகாரத்து குறள் ஒன்றில் நயம்படக் கூறுகின்றார்.