25. அருளுடைமை

அன்பு தொடர்புடையாரிடத்து காட்டப்படும் பற்று; அருள் என்பது தொடர்பில்லாத பிற உயிர்களிடத்தும் பரந்து செல்லும் கருணை அல்லது இரக்கக் குணம் ஆகும். இது பிற உயிர்களின் துயர் போக்குதல், பிற உயிர்களுக்குத் துன்பம் இழையாமை, பிற உயிர்களைக் கொல்லாமை ஆகிய பண்புகளைக் குறித்து நிற்கும். மன்னுயிர் ஓம்பும் மாண்புடைய இப்பண்புடையாரை அருளாளர் என்று மொழிவர். மனிதநேயம் என்பதும் அருளின்பாற்படுவதே. ஆடு, மாடு போன்ற மெல்லிய உயிர்களிடம் இரக்கம் காட்டுவதும் அருட்செயல் ஆகும். அருள் ஆள்பவர் வன்முறையை முற்றிலும் நீக்கியவராவர். நம்மிலும் வலிமையற்ற மனிதர்களிடம் மாறுபாடு கொள்ளும்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற எளியவழி ஒன்று கற்றுத்தரப்படுகிறது.