3. நீத்தார் பெருமை

தந்நலம் நீத்தார் பெருமை கூறும் அதிகாரம். மானிட உயர்வை அடையச் செல்லும் பாதையில் உள்ள மேன்மக்கள் பற்றிப் பேசுவது. தனிப்பட்ட விடுதலை நோக்கித் துறவறம் மேற்கொண்டவர்களைக் குறிப்பதல்ல இத்தொகுப்பு; உடற்பற்று விட்டு உடல்வாழ்வை பொதுநலத்துக்காகத் தந்து தொண்டு செய்பவர்களைச் சிறப்பிப்பது. மனித வாழ்வின் உச்சநிலை அடைந்தவர்களைப் போற்றுகிறது. இத்தகைய உயர்ந்தோரின் செயல்பாடுகள்தாம் சமுதாய ஆற்றலை உருவாக்குகின்றன. இதனாலேயே கடவுள் வணக்கம் சொல்லி, இறைவனின் அடையாளம் காட்டும் இயற்கையின் சிறப்பு கூறியபின் நிறைமனிதரின் இன்றியமையாமை கருதி பாயிரத்தின் மூன்றாவது அதிகாரமாக நீத்தார் பெருமை பாடுகிறார் வள்ளுவர். சிறப்பு வாய்ந்தவரில் மிக மேன்மையாளராகக் கருதப்படும் வெவ்வேறு வகைப்பட்ட மாந்தர்களை நீத்தார் என்ற பொதுப்பெயரில் அழைத்து அக்குழாத்து மாந்தர் சிலரை வகைப்படுத்தி இந்த அதிகாரத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் வள்ளுவர்.