குறள்: 681 69. தூது
மு. வரதராசனார் உரை
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
தூது என்பது இரண்டு நாடுகளுக்குமுள்ள உறவுகள் தொடர்பாகச் செய்தியனுப்புதலைக் குறிப்பது. இது அரசாட்சியில் ஒரு இன்றியமையாத அங்கம். தூதுவர் அமைச்சர்க்கு இணையாக மதிக்கப்படுபவர். அவர்க்கு உண்டான பண்புகளும் தகுதிகளும் செயல்திறன்களும் இந்த அதிகாரத்தில் கூறப்படுகின்றன. பிற நாட்டு அரசரிடம் வெளிப்படையாய்ச் சென்று தன் நாட்டு அரசரின் செய்தியைச் சொல்வதும், அந்த நாட்டில் உள்ள நிலையை அறிந்துவந்து தம் நாட்டவரிடம் உரைப்பதும் தூதுவனின் கடமையாகும். சில வேளைகளில் அரசுப் பணியில் இல்லாத முனிவர்களும் புலவர்களும் தூது சென்றிருக்கிறார்கள். ஓளவையார் அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றது நாம் அறிந்த ஒன்று; அக்காலத்திலேயே ஒரு பெண்பாற் புலவர் வெற்றிகரமாகத் தூதுச் செயலாற்றினார் என்பது எண்ணி மகிழத்தக்கது.
குறள்: 681 69. தூது
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
குறள்: 682 69. தூது
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
குறள்: 683 69. தூது
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
குறள்: 684 69. தூது
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.
குறள்: 685 69. தூது
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
குறள்: 686 69. தூது
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.
குறள்: 687 69. தூது
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.
குறள்: 688 69. தூது
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
குறள்: 689 69. தூது
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
குறள்: 690 69. தூது
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.