7. மக்கட்பேறு

புதல்வரைப் பெறுதல் என்பது மக்களைப் பெறுதல் அதாவது மக்கட்பேறு பற்றியது. மக்கள் அறிவுள்ள பிள்ளைகளாக உருவானால் அதைவிடச் சிறந்த பேறு வேறெதுமில்லை எனத் தொடங்குகிறது அதிகாரம். அவர்கள் பண்புள்ளவர்களாகவும் அவரவர் காலில் நிற்கும்படியாகவும் வளர்க்கப்படவேண்டும் என்று தொடர்கிறது. குழந்தைகளின் சிறுகை ஊட்டிய உணவும், மெய்தீண்டலும், மழலைச் சொல்லும் பெற்றோர்க்கு அளவிலா இன்பம் பயக்கும் என்றும் மகனை உலக அரங்கில் முந்தியிருக்கச் செய்தல் தந்தையின் கடமை என்றும் குழந்தைகளை அறிவுடைமையராக்குதல் பெற்றோரின் வளர்ப்பு நோக்கமாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. பிள்ளைகள் நற்குணம் கொண்டவரானால் தாய்க்கு மகிழ்ச்சி. அவர்கள் பெருமை கொண்டவர்களாக ஆனால் தந்தையின் முயற்சிகளுக்கு வெற்றி என்று சொல்லி முடிகிறது இவ்வதிகாரம்.