14. ஒழுக்கம் உடைமை

தனிமனித வாழ்வும் சமுதாய அமைப்பு முறைகளும் சீராகச் செல்லக் கடைப்பிடிக்கப்படுவது ஒழுக்கநெறிகளாகும். ஒழுக்கமுடைமை பிறப்பிற்குப் பெருமை சேர்க்கும்; ஒழுக்கக்குறைவு பிறப்பிற்கு இழிவு தரும் என்பது இவ்வதிகாரத்தில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. ஒழுக்கம் மக்கள் கூட்டுறவிற்குத் துணையாய் நின்று பொதுநலப்பயன் நல்குவதுமாகும். இதனாலேயே 'ஒழுக்கமுடைமை குடிமை' என்று சொன்னதோடு நில்லாமல் 'உலகத்தோ டொட்ட ஒழுகல்' எனவும் அதிகாரம் விதிக்கிறது. இக்கூட்டுறவே சமுதாயத்தை இயக்கி முன்னெடுத்துச் செல்லும். விழுப்பம் தருவதால் ஒழுக்கம் ஒருவனுக்கு உயிரைவிட மேலாகும்; அதுதான் குடிப்பிறப்பு; அதுதான் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக அமைவது. அதுதான் நன்மைக்கெல்லாம் அடிப்படை; ஏட்டில் எழுதப் பெற்றது எல்லாம் ஒழுக்கமன்று; உலகத்தோடு ஒத்ததே ஒழுக்கம். இவை அதிகாரம் கூறும் செய்திகள்.