17. அழுக்காறாமை

அழுக்காறாமை அதிகாரம் பொறாமைப்படாதிருத்தலைச் சொல்லுவது. பொறாமை என்பது மன அழுக்கு அதாவது ஒருவனது உள்ளத்திலுள்ள மாசு குறித்தது. பிறர்க்குக் கிடைக்கும் பேறு கண்டு தாங்கிக் கொள்ள முடியாமை அழுக்காறாகும். பொறாமைக்குணம், மற்றக் குற்றங்கள் நிகழ வழி வகுப்பதால், அது முற்றிலும் களையப்பட வேண்டிய ஒன்றாகும். அழுக்காறு உடையவனை அக்குணமே அழித்துவிடும். அவனுக்கு நல்வாழ்வு இருக்காது; அவனைவிட்டுச் செல்வம் விலகிச் செல்லும்; அவனது சுற்றமும் அவனின்று நீங்கும்; உணவும் உடையும் இல்லாமல் போவான்; பொறாமை அவனை இருட்டுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பன இவ்வதிகாரச் செய்யுள்கள் தரும் செய்தி. பொறாமைக்காரனும் நன்றாகத்தானே இருக்கிறான், பொறாமையில்லாதவன் தேய்ந்தும் போகிறானே அதற்கு என்ன செய்வது? இதற்கு வள்ளுவர் கூறும் பதில்: கூட்டிக்கழித்துப் பார்த்தால் பொறாமையுடையார் செல்வம் பெருக்கியதும் இல்லை; அழுக்காறு இல்லாதவர் வளர்ச்சியில் குன்றியதாகவும் இல்லை என்பது. மாந்தர் அழுக்காறு இல்லாத இயல்பை ஒழுக்க வழியாகக் கொள்ள வேண்டும் என்பது இவ்வதிகார அறிவுரை.