குறள்: 591 60. ஊக்கம் உடைமை
மு. வரதராசனார் உரை
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
ஊக்கமுடைமை என்பது செயல் ஆற்றுவதில் தளர்ச்சியின்றி மன எழுச்சி உடைத்தாதலைக் குறிக்கும். செயலின் கண் ஆர்வமும் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் ஒருப்பாட்டையும் முயற்சியையும் உள்ளடக்கியது. ஒருவன் வாழ்வில் உயர்வடைவதற்கு ஊக்கம் இன்றியமையாததாக வேண்டப்படுகிறது. ஊக்கமில்லையெனில் போட்டிநிறைந்த உலகில் வெற்றி பெற்று முன்னிலையில் நிற்க இயலாது. இவ்வதிகாரத்தைத் தொடர்ந்துவரும் மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கணழியாமை என்பனவும் ஊக்கமுடைமைக்கு நெருங்கிய தொடர்புடையனவே.
குறள்: 591 60. ஊக்கம் உடைமை
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
குறள்: 592 60. ஊக்கம் உடைமை
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
குறள்: 593 60. ஊக்கம் உடைமை
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.
குறள்: 594 60. ஊக்கம் உடைமை
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
குறள்: 595 60. ஊக்கம் உடைமை
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
குறள்: 596 60. ஊக்கம் உடைமை
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
குறள்: 597 60. ஊக்கம் உடைமை
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
குறள்: 598 60. ஊக்கம் உடைமை
ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.
குறள்: 599 60. ஊக்கம் உடைமை
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.
குறள்: 600 60. ஊக்கம் உடைமை
ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.