66. வினைத் தூய்மை

இவ்வதிகாரம் சொல்லும் வினை என்பது அரசாட்சியில் நிகழ்கின்ற செயலைக் குறிப்பது. நாட்டிற்காகச் செய்யப்படும் செயல்களுக்கு அமைச்சரே பொறுப்பு. அவர் வினைகள் ஆற்றும்போது தூய்மையைக் கடைப்பிடித்தல் இன்றியமையாதது என வலியுறுத்தப்படுகிறது. எனவே வினைத்தூய்மை என்ற தலைப்பு. செய்யும் வினை நன்மையும் புகழும் தரவேண்டும். செயல் மட்டுமல்ல அதை நிறைவேற்றும் வழிமுறைகளும் தூயனவாய் இருத்தல் வேண்டும் என்பது நிரம்பச் சொல்லப்படுகிறது. சிறப்பாக அமைச்சர்க்குச் சொல்லப்பட்டாலும் இங்கு கூறப்பட்ட கருத்துகள் பொதுவகையில் மாந்தர் அனைவர்க்கும் பொருந்தக்கூடியனவே.