79. நட்பு

நட்பு அதிகாரப்பட்ட இடத்தில் கூற வேண்டுவன வெல்லாம் ஓரதிகாரத்தில் அடங்காமையால், நட்பையும் அதனோடு சேர்த்து எண்ணக் கூடியவற்றையும் உடன்பாட்டுவகையால் கூறுவனவாக ஐந்து அதிகாரங்களாக வகுத்துக்கொண்டார் வள்ளுவர். முதல் அதிகாரமான இதில் நட்பின் இயல்புகள் விளக்கப்படுகின்றன. அதிகாரப்பாடல்கள் தனிமனித நட்புக்கு மட்டுமன்றி, நாடுகளுக்கிடையேயான நட்புக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. ஓர் அரசு,‌ நாடு, அரண்,‌ பொருள்களைப்‌ பெற்று, அவற்றை அழியாமல்‌ காக்கும்‌ படையை உடையனாயினும்‌ நட்பினர்‌ துணையும்‌ அவனுக்கு இன்றியமையாது வேண்டும். அரசுக்கு போர்க் காலத்தில் நட்பரசின் துணை தேவை. மாந்தர்க்குத் துன்பக்காலத்தில் நண்பர் உறவு உதவும்.