95. மருந்து

பிணிகள் எவரையும் அணுகாது நீக்குவதற்கும்‌ உற்ற நோயைப்‌ போக்குவதற்கும்‌ ஆன வழிகளைக்‌ கூறுவது மருந்து அதிகாரம்‌. உணவு ஒழுக்கம் பேசப்பட்டு உணவே மருந்து என்பது அழுந்தச் சொல்லப்படுகிறது. அளவாக உணவு உட்கொள்ளுவதும், ஏற்ற உணவு உண்பதும், நோய் உண்டாகிவிட்டால் அதைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளும்‌ இவ்வதிகாரத்துள்‌ எடுத்துக்‌ கூறப்பட்டுள்ளன. மருந்தே வேண்டாமைக்கு உரிய வழிவகைகள் குறிக்கப்பெறுகின்றன. மருந்து மட்டும் மருந்தாகாது; மருந்துடன் நோயுற்றவன், மருத்துவன், செவிலியர் ஆகிய மருந்தாக மதிக்கப்படுவார் மூவரையும் சேர்த்து மருந்து நான்காகும் என்பதும் சொல்லப்பட்டது.