22. ஒப்புரவறிதல்

ஒப்புரவுஅறிதல் என்பது உலக ஒழுக்கத்தை அறிந்து ஒருவர்க்கொருவர் உதவி செய்து ஒத்துப்பழகுவதைக் குறிப்பது. இது தானே அறிந்து செய்யும் தன்மையதாதலால் ஒப்புரவு-அறிதல் எனப்பட்டது. அன்பின் அகத்தூண்டுதலால் விளைவது ஒப்புரவு. அது ஒருவன் தான் வாழும் சமுதாயத்தோடு தன்னை அடையாளம் கண்டு பொதுக்கொடை வழங்குவதும் பொதுநலத் தொண்டு ஆற்றுவதும் ஆம். தான் சமுதாயத்திற்கு இன்றியமையாது செய்யும் கடமை என்பதை உணர்ந்து ஒப்புரவாளன் ஊருணி, பயன்மரம், மருந்துமரம் இவை போல உலகத்துக்குப் பயன்படும் வகையில் நற்பணிகள் செய்வான் என்கிறது அதிகாரப் பாடல்கள்.