98. பெருமை

ஒருவர் தாம் வாழ்கின்ற காலத்துப் புகழுடனும் செல்வம் செல்வாக்குடனும் திகழ்வதை ஒளி என்னும் சொல்லால் இவ்வதிகாரப் பாடல் ஒன்றில் குறிக்கிறார் வள்ளுவர். இந்தஒளி மிக்குத் தோன்றுதலுடைமையைக் குறிப்பது. அதுவே பெருமை எனப்படுவது. ஊக்க மிகுதியுடைய ஒளியுள்ள வாழ்க்கையை நடத்திச் செயற்கரிய செயல்களைச் செய்பவராயும் தருக்கில்லாதவராயும் பிறர்க்குண்டான குறைவுகளைக் கூறாதிருப்பவராயும் விளங்குபவர் பெருமையுடையவராவர். பெருமையை மதிப்பீடு செய்வது இவ்வதிகாரத்தின் பொருணோக்காம்.